

உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் சமூகப் பாகுபாடுகளை களைய , மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த புதிய விதிமுறைகளுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி, மதம் மற்றும் பாலின ரீதியான பாகுபாடுகளை களைய புதிய விதிமுறைகளை யுஜிசி கொண்டு வந்தது.
ஜனவரி 13, 2026 அன்று, வெளியான யுஜிசியின் புதிய விதிமுறைகளின் படி , உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை கடைப்பிடிப்பதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த புதிய விதிமுறைகளில் உள்ள குறிப்பிட்ட அம்சங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
புதிய விதிகளின்படி , ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் 'சமத்துவக் குழுக்களை' அமைக்க வேண்டியது கட்டயமாக்கப்படும். இதன் படி சாதிப் பாகுபாடு என்பது பட்டியல் சமூகம் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோருக்கு எதிரான சமூகப் பாகுபாடுகளுக்கு மட்டுமே விசாரணை நடத்த முடியும் . உயர்கல்வி நிறுவனங்களில் சமூக மற்றும் பாலின ரீதியாக பாகுபாடு காண்பிக்கப்பட்டால் , அவற்றை உடனடியாக புகாரளிக்கும் வகையில் 24 மணிநேர உதவி எண் மற்றும் ஆன்லைன் தளம் உருவாக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் , சமத்துவ குழுக்கள் விசாரித்து விசாரணையை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்ற தவறும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்வதை நிறுத்தும், மேலும் அந்த கல்வி நிறுவனத்தின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் இந்த விதிமுறைகளில் இருந்துள்ளன. இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட உடனேயே நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த போராட்டங்கள் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (ஜன 29 ,2026) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணைக்கு பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் யுஜிசியின் புதிய சமூக பாகுபாடு விதிமுறைகளுக்கு எதிராக தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பில் புதிய விதிமுறைகளில் போதுமான தெளிவு எதுவும் இல்லை. சமூக பாகுபாடு என்பது பாதிக்கப்படும் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஆதரவாக இருக்க வேண்டும். இதில் பாதிக்கப்படும் ஒரு சமூகத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியாது. புதிய விதிமுறைகளில் பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, சமத்துவ குழுக்களில் பொதுப் பிரிவினர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாதது , ஒருதலைபட்சமாக உள்ளது. இதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் புதிய விதிமுறைகளுக்கு தடை விதித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையைத் தொடர்ந்து மறு உத்தரவு வெளியாகும் வரை, யுஜிசியின் முந்தைய விதிமுறைகளே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளை மறுசீரமைப்பு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.