சனாதன விவகாரம்:உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

உதயநிதி
உதயநிதி

மிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய விவகாரம் அரசியல் ரீதியாக தேசியளவில் பெரும் பேசுப்பொருளானது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக சென்னை காமராஜர் அரங்கத்தில் கடந்த 2ம் தேதி முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சானதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்.

சனாதனம் அப்படிங்கிற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் – சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்'' என்றார்.

அதேபோல், முந்தைய காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏற்றுவது, குலகல்வி மற்றும் jற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க கடுமையாக எதிர்க்கும் என பல்வேறு விஷயங்களை அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார்.

அவரின் இந்த பேச்சு அடுத்தடுத்த நாட்களில் நாடு முழுவதும் பேசுப்பொருளானது. மாநில பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உட்பட பலர் உதயநிதியின் சனாதன பேச்சு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக உதயநிதியின் பேச்சை தனது X சமூக ஊடகத்தில் பகிர்ந்த பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் திமுக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை மலேரியாவுடனும் டெங்கு உடனும் தொடர்புபடுத்திப் பேசுகிறார்.

அதை வெறுமனே எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும் என்பது அவர் கருத்து. சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்” என்றார். மேலும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்தார். அதேபோல் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சனாதனத்திற்கு எதிரான பேசினார் நாக்கை வெட்டுவோம் என்றார். இவ்வாறு உதயநிதியின் சனாதனம் பேச்சு நாடுமுழுவதும் பேசுப்பொருளானது.

இதனைத்தொடர்ந்து வலதுசாரி வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என வேண்டுகோள்விடுத்திருந்தனர். ஆனால், உரிய வழிமுறையை கடைப்பிடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், திமுக எம்பி ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன், விசிக எம்பி திருமாவளவன் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.சேகர்பாபு, தமிழ்நாடு டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையார் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் உள்ளிட்டவர்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக முன்பு விளக்கம் அளித்த உதயநிதி “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்று நான் கூறவே இல்லை. மதத்தின், சாதியின் பெயரால் சனாதன தர்மம் மக்களைப் பிளவுபடுத்தியுள்ளது.

சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன்.சட்ட ரீதியாகவும் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com