
ஒரு குழந்தையின் சிரிப்பு, அதன் விளையாட்டுச் சத்தம், ஒரு நொடி காணாமல் போனால், ஒரு பெற்றோருக்கு அந்த நொடி ஒரு யுகம் போல உறைந்துபோகும். குழந்தை விளையாடிவிட்டுத் தூங்கிய அறை, அதன் கை பட்ட பொருட்கள், அதன் வாசம் படிந்த உடைகள் என எல்லாமும் அந்தப் பெற்றோரை ஒவ்வொரு நொடியும் வாட்டி வதைக்கும்.
‘வாட்ஸ்அப்’ குழுக்களில் பகிரப்படும் புகைப்படங்கள், காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் வாக்குமூலங்கள், கண்ணீர் கலந்த விசாரணைகள் என அவர்களின் வாழ்க்கை ஒரு முடிவில்லாத இருண்ட பயணமாக மாறிவிடுகிறது.
எங்கே சென்றது என் குழந்தை? எங்கே சென்றது என் மகிழ்ச்சி? என்ற கேள்விகள் தினமும் உயிரை உருக்குகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், காணாமல் போன குழந்தைகளைக் கண்டறியும் முயற்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக உச்ச நீதிமன்றம் ஒரு புதிய பரிந்துரையை முன்வைத்துள்ளது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த பரிந்துரையை முன்வைத்தது.
காணாமல் போன குழந்தைகள் குறித்த முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்ட உடனேயே அந்தத் தகவல்கள் இந்த தேசிய இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.
இது ஒரு மத்திய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த இணையதளத்தில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் நோடல் அதிகாரிகள் தரவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.
தற்போதுள்ள சிக்கல்களும், மனுவின் முக்கியத்துவமும்
பல மாநிலங்களில் செயல்படும் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அவலநிலையை இந்த மனு எடுத்துக்காட்டுகிறது.
சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு, நன்கு திட்டமிடப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான வலையமைப்புகள் மூலம் கடத்தல்காரர்களிடம் விற்கப்படுவதாக இந்த மனு குற்றம் சாட்டுகிறது.
இந்த மோசடியின் அளவைக் குறிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளையும் இது மேற்கோள் காட்டுகிறது.
உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர், காணாமல் போன குழந்தைகள் தொடர்பான தரவுகளை வழங்காத பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடும் நினைவூட்டல்களை அனுப்பும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
உள்துறை அமைச்சகத்தின் தரவுகள்
மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 23, 2024 அன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடத்தலைத் தடுப்பது, பாதுகாப்பு மற்றும் வழக்குத் தொடர்தல் ஆகிய அம்சங்கள் குறித்து 2013-ம் ஆண்டு ஜூன் 25 அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மனித கடத்தல் தடுப்புப் பிரிவுகளை (Anti-Human Trafficking Units - AHTUs) அமைக்கவும், மேம்படுத்தவும் சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
கடத்தல் குற்றங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பகிர்வதற்காக, 2020-ம் ஆண்டில் க்ரைம் மல்டி ஏஜென்சி சென்டர் (Cri-MAC) என்ற தேசிய அளவிலான தொடர்பு தளமும் தொடங்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்த யோசனைகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.