யூனியன் பிரேதசமான சண்டிகர் மாநகரத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டன. மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சண்டிகர் தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை திருத்தியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. இப்படியா அவர் தேர்தல் நடத்துகிறார்? இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். இது ஜனநாயக படுகொலை. அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி கடுமையாக சாடினார்.
மேலும், ”சொலிசிட்டர் ஜெனரல் அவர்களே போய் அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள் உச்சநீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கோபம் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முறையான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க தவறிவிட்டது என்றும், தேர்தல் நடத்தும் அதிகாரி கேமராவைப் பார்த்துக்கொண்டு ஒரு திருடனைப் போல ஏன் செயல்படுகிறார்?
இவ்விவகாரத்தில் எங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் மேயர் தேர்தல் நடத்தப்பட்ட அனைத்து வீடியோ பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டம் நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.