வந்தாச்சு தீபாவளி.. 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. உச்சநீதிமன்றம் அதிரடி!

பட்டாசு
பட்டாசு
Published on

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, பாதுகாத்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அர்ஜூன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விளக்கங்களை கேட்ட பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.

இதன்படி பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேரியம் இல்லாத பட்டாசுகளை தயாரிப்பது சிரமமாகும். அது சரவெடியில் குறைவான அளவே உள்ளது. எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு சரவெடி பட்டாசு விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியுள்ளது. சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com