உச்சநீதிமன்ற உத்தரவு - ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுகிறதா?

உச்சநீதிமன்ற உத்தரவு - ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுகிறதா?
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அனுமதிக்காத எந்தவொரு பணியையும் அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்திருக்கிறது. இனி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா, இல்லையா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து, கழிவுகளை அகற்றுவதுற்கு அனுமதியளித்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்த பணிகள் வேதாந்தா நிர்வாகம் சார்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் உதிரி பாகங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை அகற்றவும், ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யவும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு ஐந்தாண்டுகளாகிறது. முன்னதாக ஆலையில் உள்ள ஜிப்சத்தை பாதுகாப்பாக அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்குமாறு வேதாந்தா நிறுவனம் சார்பாக கோரிக்கை விடப்பட்டிருந்தது. இது தவிர ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று உள்ளூர் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.

சென்றவாரம் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆலையை மீண்டும் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்து கோரிக்கை மனு தந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதன் மூலமாக தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கூட தற்போது மனம் மாறி ஆலையை திறக்க வேண்டும் என்கிற கோர்க்கையை முன்வைக்கிறார்கள். ஜிப்சம் அகற்றவும், பசுமை வளாகத்தை பாதுகாக்கவும் உடனடியாக அனுமதி அளித்தால் நிறைய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணிக்காக வேதாந்தா நிர்வாகத்தை அனுமதிப்பது தவறான விஷயம். ஆலைக்கு எதிராக போராடிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. கழிவுகளை அகற்றும் பணியை வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று அரசே முன்னெடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என்கிறார்கள், போராட்டக்காரர்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக இடித்து அகற்றிவிட்டு, பழைய இடத்தை மீட்டெடுக்கும் செயலைச் செய்யவேண்டும். எக்காரணம் கொண்டும் வேதாந்தா நிறுவனத்தை அனுமதித்துவிடக்கூடாது என்கிறார்கள். ஸ்டெர்லைட் குறித்த வழக்கு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. தீர்ப்பு வரும்வரை பிரச்னையில் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com