
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. இந்த ஊழல் வழக்கு தொடர்பாக மணீஷ்சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
தம்மை ஜாமீனில் விடுவிக்க கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திங்கள்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, எல்.பி.என்.பாட்டீ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், விசாரணையை 6 முதல் 8 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டனர். விசாரணை ஆமைவேகத்தில் நடக்குமானால், சிசோடியா பின்னர் ஜாமீன் கேட்டு மனு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
முன்னதாக இப்போது ரத்துச் செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையை மாற்றியமைக்க வழங்கப்பட்டதாக கூறப்படும் லஞ்சம் குற்றத்தின் ஒருபகுதியாக இல்லாவிட்டால் சிசோடியாவுக்கு எதிரான பணமோசடி வழக்கை நிரூபிப்பது கடினம் என்று உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தது. மேலும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்ற அனுமானங்களின் அடிப்படையில் இந்த வழக்கை தொடரமுடியாது என்றும் சட்டப்படி என்ன பாதுகாப்பு இருக்கிறதோ அதை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தெரிவித்தது.
சிபிஐயால் கைது செய்யப்பட்ட பின்னர், வழக்கு பதிவு செய்த்தன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கில் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரித்தது. சிபிஐயும் திகார் சிறையில் சிசோடியாவிடம் விசாரணை நடத்தியது.
முன்னதாக கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று கூறி தில்லி உயர்நீதிமன்றம் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுத்தது. துணை முதல்வரும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த அவர், சாட்சிகளை கலைக்கும் திறன்பெற்ற நபர் என்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் கூறியது.