
தலைநகரில் தெரு நாய்களால் ஏற்படும் அச்சம் மற்றும் ஆபத்தை கட்டுப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசிய தலைநகர் மண்டலம் (NCR) பகுதிகளில் தொடரும் ரேபிஸ் நோய் பரவல் மற்றும் நாய் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, நீதிபதிகள் ஜே.பி. பார்டிவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, தெரு நாய்களை அகற்றும் நடவடிக்கைகளை தடுக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவின்படி, டெல்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட NCR பகுதிகளில் உள்ள மாநகராட்சிகள் உடனடியாக தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, டெல்லி, நொய்டா, காசியாபாத் மற்றும் குருகிராம் போன்ற ஆபத்து பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாய் அகற்றல் பணியை “முதலாவதும் மிக முக்கியமானதுமாக” கருத வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், இதை செயல்படுத்துவதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது என எச்சரித்தனர்.
தேவைப்பட்டால் சிறப்பு படையை உருவாக்கவும், நடவடிக்கையில் எந்த சமரசமும் இடம்பெறக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேபிஸ் தடுப்பு: முகாம்கள் அமைக்க உத்தரவு
டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி (MCD) மற்றும் புதுடெல்லி மாநகராட்சி (NDMC) ஆகியவை எட்டு வாரங்களுக்குள் நாய் முகாம்களை அமைக்க வேண்டும்.
இந்த முகாம்களில் கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளுக்கு போதுமான ஊழியர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்றும், சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விலங்கு நல ஆர்வலர்களுக்கு நீதிமன்ற கண்டனம்:
பொது மக்களின் உயிர்ப் பாதுகாப்பு முதலில் வருகிறது, இங்கே உணர்ச்சிகளுக்கு இடமில்லை” என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.
தெரு நாய்களை தொலைதூர பகுதிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு இது பரவுமா?
இந்த உத்தரவு தற்போது டெல்லி-NCR பகுதிகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும் தெரு நாய் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், இதே போன்ற நடவடிக்கைகள் எப்போது தொடங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன.
சென்னை மாநகராட்சி ஏற்கனவே நாய் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டிற்கும் நீட்டிக்கப்படும் பட்சத்தில், நாயில்லா தெருக்கள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அரசு மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.