திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்து வரும் நிலையில், 6ஆம் நாளான இன்று சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சூரனை சம்ஹாரம் செய்ய கடற்கரைக்கு எழுந்தருளினார் ஜெயந்திநாதர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலிலானது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடாகும்.
கடந்த 25-ஆம் தேதி அன்று கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனால் விழா தொடங்கியதிலிருந்து அங்கு ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முருகப்பெருமானை வழிபட குடும்பத்துடன் பலர் கோவிலில் தங்கி வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.
நேற்று அதிகாலை வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.