குஜராத் மாநிலத்தின் சூரத் நகரைச் சேர்ந்த தன்யா சிங், ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார். தன் பெற்றோருடன் வசித்து வந்த இவர் அறையில் தற்கொலை செய்துக்கொண்டது, திங்கட்கிழமை காலைதான் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து இப்போது விசாரணையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் ஒருவருக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்று போலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தன்யா சிங்கின் தந்தை திங்கட்கிழமை காலை அவரை எழுப்புவதற்காக அவருடைய அறைக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் தன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது வீட்டில் சோதனை செய்துப் பார்த்ததில் எந்த குறிப்பும் கிடைக்கவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. ஆகையால் போலீஸார் தன்யாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விசாரித்து வருகின்றனர். மேலும் தன்யாவின் போனை கைப்பற்றியுள்ளனர்.
இந்தநிலையில் தன்யாவிற்கும் ஐபிஎல் தொடரில் சன்ரைஸ் ஹைத்ராபாத் அணியில் விளையாடி வரும் அபிஷேக் ஷர்மாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியில் ஆல்ரவுண்டராக இருக்கும் அபிஷேக் ஷர்மாவும் தன்யா சிங்கும் நெருக்கமாகப் பழகி வந்திருக்கின்றனர். ஆனால், சமீபக்காலமாக தன்யா அனுப்பிய எந்த மெசேஜிற்கும் அபிஷேக் ஷர்மா பதிலளிக்கவில்லை. தன்யா சிங்கின் செல்போன் விவரங்களை சேகரித்து வருகின்றோம். அதேபோல் அபிஷேக் ஷர்மாவிடம் நேரடியாக விசாரிப்பதற்கு நோட்டிஸ் அனுப்புவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் அறிவிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
அபிஷேக் ஷர்மா ஒரு வளர்ந்து வரும் வீரராவார். 2017ம் ஆண்டே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி நல்ல ஸ்கோரை எடுத்துவந்தாலும், இன்னும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக போராடியே வருகிறார்.