அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்: உச்சநீதிமன்றம் அதிரடி

அனைத்து காவல் நிலையங்களிலும்  கண்காணிப்பு கேமராக்கள்: உச்சநீதிமன்றம் அதிரடி
Published on

நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் இன்னும் ஒரு மாதத்துக்குள் சிசிடிவி கேமரா பொருத்தாவிட்டால் நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லும் கைதிகளை அடித்து கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும், ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் கட்டாய கண்காணிப்புக் கேமரா பொருத்துதல் தொடா்பான உத்தரவை ஒரு மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ‘இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான பதில் மனுவை மத்திய, மாநில அரசுகள் வரும் மாா்ச் 29-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். இந்த உத்தரவு பின்பற்றவில்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவா்கள் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறி கடந்த 2020-ஆம் டிசம்பா் மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.எஃப்.நரிமன் தலைமையிலான அமா்வு,

‘நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்களில் இன்னும் 6 வாரங்களுக்குள் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘காவல்நிலையங்களில் 6 வாரங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடா்பான பதில் மனுவை இன்னும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. அதுபோல மத்திய புலனாய்வு அமைப்புகளின் பல அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டியுள்ளது ’ என்று நீதிபதிகளுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் சித்தாா்த்தா தேவ் குறிப்பிட்டாா்.

அப்போது, ‘சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. என்ஐஏ அலுவலகங்களில் கேமரா பொருத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துவிடும். அதுபோல அமலாக்கத்துறை அலுவலகங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு மே மாதம் வரை கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்று மத்திய அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அனைத்து காவல் நிலையங்கள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் கட்டாய கண்காணிப்புக் கேமரா பொருத்துதல் தொடா்பான உத்தரவை ஒரு மாதத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான பதில் மனு வரும் மாா்ச் 29-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட மத்திய உள்துறை செயலா், மாநில தலைமைச் செயலாளா்கள் மற்றும் உள்துறை செயலாளா்கள் ஆகியோா் மீது தேவையான நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்று உத்தரவிட்டனா்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com