டிஐஜி விஜயகுமார் தற்கொலையில் சந்தேகம்: சிபிஐ விசாரணை கோரும் எடப்பாடி பழனிசாமி!

டிஐஜி விஜயகுமார் தற்கொலையில் சந்தேகம்: சிபிஐ விசாரணை கோரும் எடப்பாடி பழனிசாமி!

கோயம்புத்தூர் சரக டிஐஜியாக பொறுப்பு வகித்து வந்தவர் விஜயகுமார் ஐபிஎஸ். அவர் இன்று காலை தனது வீட்டில் தம்முடைய துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தற்கொலை குறித்து போலீசார் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகையில், ‘கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில நாட்களாகவே பெரும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார். அவருக்கு ஐ.ஜி. சுதாகர் நேற்று முன்தினம் கவுன்சிலிங் கொடுத்து இருக்கிறார். அவரது தற்கொலைக்கு அலுவலகப் பிரச்னையே அல்லது பணிச்சுமையோ காரணம் இல்லை. இது சம்பந்தமாக ஐ.ஜி. சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்’ என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில், டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘இந்தத் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி இருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயக்குமார் IPS மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியைத் துவங்கிய அவர், பிறகு நேரடியாக இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி, டிஐஜி அளவுக்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்டார். அவரது மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். காலையில் வழக்கமான நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வந்த விஜயக்குமார், தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே, விஜயகுமார் IPS தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com