

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான ட்ரோன்கள் (Drones) மீண்டும் அத்துமீறி நுழைந்தன.இதனை முன்கூட்டியே கண்டறிந்து சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவத்தினர், அந்த ட்ரோன்களைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் எல்லையைத் தாண்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இவை பெரும்பாலும் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நுழைவதற்கான வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என்று இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 11 முதல் 15 ஆம் தேதி வரையில் 15 ட்ரோன்கள் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதியை ஒட்டிய ராம்கார், சம்பா, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் பகுதிகளில் நேற்றிரவு 7 மணியளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டன. அப்போது எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். அத்துடன் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாகிஸ்தான் ட்ரோன்கள் எல்லைக்குள் அத்துமீறுவதால், இந்திய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திரிவேதி பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிரிகளின் ஒவ்வொரு அசைவையும் இந்திய ஆயுதப்படைகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.