நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு செயலாளரின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு செயலாளரின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!
Published on

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் பழையப்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தோட்டப் பணியாளராகப் பணியாற்றி 2006ல் ஓய்வு பெற்றார். அவர் தனது பணியை 1979ல் இருந்து வரன்முறைப்படுத்தி, அதற்குரிய பணப்பலன்களை தனக்கு வழங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்று பரிசீலிக்க 2012ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பள்ளி கல்வித்துறை தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனு தள்ளுபடியானது. அதைத் தொடர்ந்து, ஞானப்பிரகாசத்தின் பணப்பலன்களும் அவருக்குக் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் (தற்போது நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார்), ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் முத்துபழனிசாமி, நெல்லை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபால ஆண்டோ ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஞானப்பிரகாசம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பிரதீப் யாதவ் உள்ளிட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதை ஏற்க மறுத்து பிரதீப் யாதவ் உட்பட மூன்று பேருக்கும் 2 வார சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், மூன்று பேரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் அரசு தரப்பில் வியாழக்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதையடுத்து, பிரதீப் யாதவ் உள்ளிட்ட மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட 2 வார சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து இந்த விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com