

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தூய்மையான நகரங்கள், ஊரகப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு தூய்மையான நகரங்களாக இந்தூர், சூரத் இரண்டும் முதலிடத்தை பிடித்துள்ளன. தூய்மையான நகரங்களுக்கான விருதை இந்தூர் 7-வது முறையாக பெறுகிறது.
இதற்கான விருதுகளை வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.நவி மும்பை மூன்றாவது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டும் இது மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட சிறிய நகரங்களில் தூய்மைக்கான விருதை மகாராஷ்டிர மாநிலத்தின் சஸ்வாத் பெற்றது. சத்தீஸ்கரில் உள்ள பதான் 2-வது இடத்தையும் மகாராஷ்டிரத்தில் உள்ள லோனாவ்லா மூன்றாவது இடத்தையும் பிடித்தன. வாராணசி மற்று கங்கை நகரம் தூய்மையான இடங்ளாக தெரிவு செய்யப்பட்டன.
கன்டோன்மென்ட் நகரங்களில் மத்தியப் பிரதேசத்தின் மோவ் கன்டோன்மென் போர்டு தூய்மையான பகுதியாக தேர்வுசெய்யப்பட்டு விருது பெற்றது. இந்த விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை ஹர்தீப் சிங் புரி, துறை செயலாளர் மனோஜ் ஜோஷி இருவரும் பங்கேற்றனர்.
மக்கள் குடியிருப்பதற்கு ஏற்றவாறு நகரங்களும், நகர்ப்புற பகுதிகளும் அமைந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் தூய்மைப் பணியில் நாட்டு மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதாலும் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிப்பு, கழிவுகள் இல்லாமை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், பிளாஸ்டிக் பொருள்கள் மேலாண்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு சுமார் 4500 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தூய்மையான நகரங்கள், ஊரகப்பகுதிகள் தேர்வுசெய்யப்பட்டன. வழக்கமாக இந்தூர் நகரம்தான் முதலிடத்தை பிடித்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சூரத்தும் அதில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.