முகலாய மன்னர்களால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களாக விளங்குபவை தாஜ்மகாலும், குதுப்மினாரும். இவை இரண்டும் இந்திய சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி, உலகம் முழுக்க இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருபவை. அதிலும் காதலின் நினைவுச் சின்னம் என்றால் காதலிக்கும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மகால்தான்.
இந்நிலையில் தாஜ்மகால் மற்றும் குதுப்மினாரை இடிக்க வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி தெரிவித்துள்ளார். முகலாய மன்னர்களால் உருவாக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவின் இந்த இரண்டு முக்கிய நினைவுச் சின்னங்களையும் இடிக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
இது சம்பந்தமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், ‘தாஜ்மகால் மற்றும் குதுப்மினாரை உடனடியாக இடிக்க வேண்டும். அந்த இடங்களில், உலகளவில் சிறப்பான வடிவமைப்பைக் கொண்ட இந்து கோயில்களைக் கட்ட வேண்டும். உலகில் எங்குமே இல்லாத வகையில் அந்த கோயில்கள் அமைய வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த இந்து கோயில்களைக் கட்டுவதற்கு தனது ஒன்றரை வருட சம்பளத்தை நன்கொடையாக அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அசாம் மாநில எம்.எல்.ஏ. ஒருவரின் இந்தக் கடிதக் கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.