
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை தனது தன்னம்பிக்கையால் நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளதுடன், சாதனைக்கு ஊனம் தடையல்ல என்பதையும் உலகிற்கு நிரூபித்துள்ளான்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம்-பத்மப்ரியா தம்பதி. இவர்களது மகன் புவி ஆற்றல் (வயது 12). மாற்றுத்திறனாளியான இந்த சிறுவன் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட சிறுவன் புவி ஆற்றல் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை - செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு ஆணையகத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். இவர் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைக்க வேண்டும் என்று புவி ஆற்றல் விரும்பினார். அதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அதற்கு அனுமதி கிடைத்த நிலையில், ராமேசுவரத்தில் இருந்து சிறுவன் புவிஆற்றல் மற்றும் பெற்றோர், நீச்சல் பயிற்சியாளர் உள்ளிட்டோர் படகு மூலம் இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை நோக்கி நீந்த தொடங்கிய புவிஆற்றல், சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார். சிறுவன் புவிஆற்றலை இந்திய கடலோர காவல் படையினர், பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன் தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 2022-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஜியா ராய் நீந்திக் கடந்துள்ளார்.
இதுகுறித்து சிறுவன் புவி ஆற்றல் கூறும்போது, தலைமன்னாரிலிருந்து இந்திய கடல் எல்லை வரை நீந்துவதற்கு சாதகமான சூழ்நிலை இருந்ததால் வேகமாக நீந்தினேன். இந்திய கடல் எல்லை தாண்டிய பிறகு கடல் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்தது. தனுஷ்கோடியை நெருங்கும் சமயத்தில் மழை பெய்ததால் வேகமாக நீந்த முடியவில்லை. இல்லையெனில் வேகமாக கரை வந்திருப்பேன் என்றார்.