இந்தியை விட தமிழ் பழமையானது - ஆளுநரின் அதிரடி பேச்சு; ஆச்சர்யத்தில் உறைந்த தி.மு.க கூட்டணியினர்!

இந்தியை விட தமிழ் பழமையானது - ஆளுநரின் அதிரடி பேச்சு; ஆச்சர்யத்தில் உறைந்த தி.மு.க கூட்டணியினர்!

இந்தி மொழியை விட தமிழ்மொழி மிகவும் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரானனது. மற்றவையெல்லாம் தமிழோடு ஒப்பிட முடியாது என்று ஆளுநர் பேசியிருக்கிறார். இதுவரை தி.மு.க கூட்டணியினர் பேசி வந்த மொழியில் ஆளுநரும் பேசியிருப்பதால் அறிவாலய வட்டாரங்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாரம்பரியம் முக்கியத்துவமுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். தமிழ் பற்றியும், தமிழ்நாடு பற்றியும் அறிந்து கொள்வதற்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆர்வத்தோடு முறைப்படி தமிழ் கற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு தரிசனம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்யும் மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் நேற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு ஆளுநர் பதிலளித்திருக்கிறார். அப்போது தமிழ் மொழி பற்றியும், தமிழ்நாடு பற்றியும் உயர்வாக ஆளுநர் பேசியிருக்கிறார்.

சமஸ்கிருதத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரே மொழி தமிழ் என்று பேசிய ஆளுநர், பழமை வாய்ந்த மொழியான தமிழ் மீது இந்தி உட்பட எந்தவொரு மொழியையும் திணிக்க முடியாது என்றும் தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உண்டு என்று தான் நம்புவதாக பேசியிருக்கிறார்.

பிற மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது மகிழ்ச்சியைத் தருவதாகவும், இன்னும் பல மாணவர்கள் தமிழை ஆழமாக படித்து தமிழறிஞர்களாக உருவெடுக்க வேண்டுமென்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

திருக்குறளை பற்றி பேசிய ஆளுநர், மனித சமூகத்தின் வளர்ச்சிக்கான அனைத்து கருத்துக்களையும் திருக்குறள் தருவதாக குறிப்பிட்டவர், திருக்குறள் போல் தமிழில் ஏராளமான இலக்கியங்கள் இருப்பதாகவும் அவற்றைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆளுநர் மாளிகை செய்யப்போகும் பங்களிப்பு பற்றியும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இனி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் தமிழ் தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களில் ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தூத்துக்குடி மக்கள் போராட்டம் குறித்தும், ஆன்லைன் தடை மசோதா குறித்தும் அவர் தெரிவித்த கருத்துகள் தி.மு.க கூட்டணியினரை தாண்டி மக்கள் மத்தியிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதை சரி செய்யும் விதமாக ஆளுநர் மாளிகையிலிருந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

முதல் கட்டமாக, ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது, தமிழின் பெருமை குறித்து வெளிமாநில மாணவர்கள் மத்தியில் பெருமிதத்தோடு பேசியிருக்கிறார். தி.மு.க அரசு தரும் அழுத்தத்தின் காரணமாகத்தான் ஆளுநரின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிவதாக உடன்பிறப்புகள் இணைய விவாதங்களில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com