தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - அழகிரிக்கு நீட்டிப்பு இல்லை?

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - அழகிரிக்கு நீட்டிப்பு இல்லை?

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே. எஸ் அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைய இருப்பதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் டெல்லியில் ஆரம்பமாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கே.எஸ். அழகிரியே தலைவராக ஓராண்டு நீடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. புதிய தலைவரின் பெயர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இரண்டு நாட்களாகவே செய்திகள் அடிபட்டு வந்தன. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதாலும், தி.மு.கவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் கே.எஸ். அழகிரியின் பதவிக்கு ஆபத்து வராது. ஓராண்டு வடிர நீட்டிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு அவசர பயணமாக டெல்லிக்கு சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி, அங்கே தேசியத் தலைவர் கார்கேவை சந்தித்து பேசியிருக்கிறார். இதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை பெற்றுவிட ஜோதி மணி, கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணகிரி எம்.பி.செல்லகுமார், முன்னாள் எம்.பி.பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட சிலர் இடம்பெற்ற பட்டியலை டெல்லி தலைமை தயாரித்து இருப்பதாகவும், தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாகவும், தலைவராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருப்போர் குறித்து கருத்தறியவும், கே.எஸ்.அழகிரியை டெல்லி தலைமை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். பதவி கேட்டு டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. பதவியை தக்க வைக்கவும் தலைவர்களை சந்திப்பது இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். எப்படி இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்பைப் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரை டெல்லியில் இருந்தபடி நியமிக்க முடியாத அரசியல் சூழல் தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது. அறிவாலயத்தோடு இணைந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. தி.மு.கவுக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படவே அதிக வாய்ப்புகள் தெரிகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com