கடந்த வருடம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி ஒன்றை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டு அனுமதி கோரி இருந்தது. தமிழ்நாடு காவல் துறை அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, தடையும் விதித்தது. அதனைத் தொடர்ந்து, இந்த வருடம் மார்ச் மாதம் 5ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி அணிவகுப்பை நடத்திக்கொள்ள அனுமதி தந்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு தரப்பில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தரவில்லை. இந்த நிலையில், ‘ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராவிட்டால் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் 5ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஓர் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், ‘ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று தமிழ்நாடு அரசு தரப்பு மனுவில் கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள இந்த மேல் முறையீடு மனுவின் மீதான விசாரணை விரைவில் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.