

இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்தல் ஏற்பட்டு விடுவதால், வேறு வழியின்றி முடிமாற்று (Hair Transplant) அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் அழகு கலை முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.
இந்தக் கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் உரிமம் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்படும். அதோடு பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை முறைகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முடி உதிர்தல் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக முடிமாற்று அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்காக அதிக பணத்தையும் அவர்கள் செலவிடுகின்றனர். ஆனால் முடிமாற்று அறுவை சிகிச்சையில் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றால், அதற்கான விடை இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் முடிமாற்று அறுவை சிகிச்சையின் போது, என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
* முடிமாற்று (Hair Transplant) அறுவை சிகிச்சை செய்யும் நிறுவனங்கள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.
* பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் தான் முடிமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
* மருத்துவ பயிற்சியாளர்கள் தோல் மருத்துவத்தில் MD DNB அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் MCh DNB பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
* முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் அறையில் ஒரு மயக்க மருந்து நிபுணர் இருக்க வேண்டும். அதோடு தேவைப்படும் போது மயக்க மருந்துகள் உடனடியாக கிடைக்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
* புதியதாக மருத்துவமனைகளை பதிவு செய்வதற்கு கட்டிட நிலைத் தன்மை, உயிர் மருத்துவக் கழிவு ஒப்பந்தம் மற்றும் சுகாதார சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
* தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக முடிமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அழகு கலை மற்றும் முடிமாற்று அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்கவே தமிழக அரசு இந்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக முடிமாற்று அறுவை சிகிச்சையில் எண்ணற்ற இளைஞர்கள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, தமிழக அரசு இந்தப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழக அரசின் இந்தப் புதிய கட்டுப்பாடுகளின் மூலம் இனி தகுதியான மருத்துவர்களால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படும்.