
கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்கள் தொழிலில் மேலும் வளர்ச்சியடைய தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் அதாவது ஒரு வாரத்திற்கு ஊதியமும் அளித்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.800 வீதம் 7 நாட்களுக்கு ரூ.5,600 வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? இதில் கலந்து கொள்ள தகுதிகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மட்டும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உங்கள் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகத்திற்கு சென்று விவரத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், 11 பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, கொத்தனார், டைல் லேயர், எலெக்ட்ரிசியன், பிளம்பிங், வெல்டர், கம்பி வளைப்பவர், கார்பெண்டர், பிளாக்ஸ்மித், கிளாஸ் வொர்க், ஏசி மெக்கானிக், பெயிண்டிங் போன்றவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பலன் பெறலாம்.
சலுகைகள், ஊதியம் :
திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற 11 பிரிவுகளில் பதிவு செய்துள்ள 1,600 கட்டுமான தொழிலாளர்கள் இந்த திறன் மேம்படுத்தும் பயிற்சியில் சேரலாம். இவர்களுக்கு வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ) நிறுவனத்தில் வரும் செப்டம்பர் 18-ம்தேதி முதல் 7 நாட்களுக்கு அதாவது ஒருவார காலத்திற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி நாட்களின் போது தினமும் மதிய உணவு மற்றும் இரு வேலை தேனீர் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலை இழப்பீட்டுத் தொகையாக தினசரி பேட்டா ரூ.800/ வீதம் 7 நாட்களுக்கு ரூ.5,600/ வழங்கப்படும். இந்த தொகை தொழிலாளர்களின் பயிற்சி நிறைவடைந்த மறுநாள் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
தேவையான ஆவணங்கள், விண்ணப்பிப்பது எப்படி?
தொழிலாளர்கள் 7 நாட்கள் திறன் மேம்படுத்தும் பயிற்சியை முடித்த பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகத்தில் திறன் பயிற்சிக்கான விண்ணப்பத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அதனுடன், நலவாரிய அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு முதல் பக்க நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் 11 பிரிவுகளில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
திறன் மேம்படுத்தும் பயிற்சி வரும் செப்டம்பர் 18-ம்தேதி முதல் தொடங்க உள்ளதால் காலம்தாழ்த்தாமல் உடனே உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.