ரேபிட்டோ செயலியை நீக்குக.. தமிழக அரசு கோரிக்கை!

ரேபிட்டோ செயலியை நீக்குக.. தமிழக அரசு கோரிக்கை!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பொதுமக்கள் ஓலா, உபர், ரேபிடோ போன்ற ஆன்லைன் செயலிகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ரேபிடோவில் பைக் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும் பொதுமக்கள் கம்மியான விலை என அதிகமாக ரேபிடோ பைக்கை உபயோகித்து வருகின்றனர். இதனால் பல்வேறு விபத்துகளும் அரங்கேறுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை மாநகர காவல்துறை, மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது குற்றம் என அறிவித்ததால், ரேபிடோ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டார்களில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது. இந்நிலையில் ரேபிடோ நிறுவனம் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை பரிந்துரையில் தவறில்லை என உத்தரவிட்டது.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ரேபிடோ தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை மாநகர காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியது. அதன் பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறி அந்த உத்தரவு நகல் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

ரேபிடோ செயலியை தடை விதிக்க வழிவகை செய்யும் காவல்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com