
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் போன்றவற்றை சொல்லலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை வைத்துள்ள குடும்பங்களில் நிதி பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், பெண் சிசுக்கொலையை தடுக்கவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும், தமிழக அரசு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ என்ற திட்டத்தினை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் தமிழக அரசு 50,000 ரூபாயை வைப்பு நிதியாக செலுத்துகிறது.
இவ்வாறு அரசு செலுத்தும் தொகை, அந்த பெண் குழந்தை வளர்ந்து 18 வயதாகும் போது, அந்த பெண் குழந்தையின் கல்வி அல்லது திருமணசெலவுகளுக்குப் பேருதவியாக இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், ஒரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அந்த குழந்தையின் பெயரில், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்தில் ரூ.50,000 நிரந்தர வைப்பு நிதியாக அரசு செலுத்துகிறது. ஆனால் அதற்கு மாறாக ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 நிரந்தர வைப்பு நிதியாக அரசு செலுத்துகிறது.
இந்த வைப்பு நிதி, ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். பின்னர், பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும், வைப்பு நிதி முதிர்ச்சியடைந்து, வட்டியுடன் சேர்த்து ஒரு கணிசமான தொகை பெண் குழந்தையின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பலனை பெற, அந்த பெண் குழந்தை குறைந்தபட்சம் 10ம் வகுப்பு பொது தேர்வை எழுத வேண்டியது கட்டாயம்.
அதேபோல் பெண் குழந்தையின் பெயரில் வைப்பு நிதி செலுத்திய 6 ஆண்டுகளில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அந்த பெண் குழந்தையின் கல்வி செலவிற்கு ரூ.1,800 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற, சில விதிமுறைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமலும், குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டியது கட்டாயம். குடும்பத்தில் ஆண் குழந்தை இருக்கக் கூடாது மற்றும் பெற்றோரில் ஒருவர், தகுந்த வயதுக்குள் கருத்தடை ஆபரேஷன் செய்திருக்க வேண்டும். அதேபோல் பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் மட்டுமே இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெற்றோர்கள், அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்ப புகைப்படம், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், ரேஷன் அட்டை, பெற்றோரின் வயது சான்றிதழ், கருத்தடை செய்யப்பட்டதற்கான சான்றிதழ் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த ஆவணத்தில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் உங்களது விண்ணப்பம் நிராகரிப்படும்.