ஊழியர்களே உஷார்..! நாளை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஒரு நாள் ஊதியம் கட்!

Tamilnadu government
Tamilnadu government
Published on

நாளை நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் கலந்து கொண்டால் ,அவர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு புதிதாக தொழிலாளர் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய சட்ட திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதை விட , தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் , தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் தொழில் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது அமலில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை திருத்தி அமைத்து நான்கு புதிய சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு மாற்றி உள்ளது. இந்த திருத்தங்களில் பல தொழிலாளர் கூட்டமைப்புகள் உடன்படவில்லை. அவர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய சட்டங்களே அமலில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த போராட்டத்திற்கு பல மாநிலங்களில் உள்ள தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன .இந்தப் போராட்டத்தில் AIBEA, AIBOA, BEFI உள்ளிட்ட முன்னணி வங்கி ஊழியர் சங்கங்கள் பங்கேற்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவின் தொழிற்சங்கமும் பங்குபெறுகிறது. இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது சேவை நிறுவன ஊழியர்கள் பங்கேற்பதால் , அரசு அலுவலக வேலைகள் மற்றும் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. ​

தொழிலாளர் கூட்டமைப்புகள் தங்களது கோரிக்கையாக , "திருத்தப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் , அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவுகளை தவிர்க்க வேண்டும். பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் மட்டும் வேலை முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வர வேண்டும்" போன்றவற்றை வலியுறுத்துகின்றனர்.

இது பற்றி இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஒரு அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தால் , தங்களது வங்கியின் பணப் பரிவர்த்தனை மற்றும் காசோலை சேவைகள் பாதிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாது ரிசர்வ் வங்கியும் நாளை ஒரு சில சேவைகளில் பாதிப்பிருக்கலாம் என்று கூறியுள்ளது.

தமிழக அரசின் சம்பள பிடித்த எச்சரிக்கை:

நாளை தமிழக அரசு ஊழியர்கள் , தகுந்த காரணமின்றி பணி விடுப்பு எடுத்திருந்தால் , அந்த நாளுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் அத்தியாவசியப் பணிகளான குடிநீர் விநியோகம், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகள் ஆகியவை எந்த ஒரு தடையுமின்றி இயங்குவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுக்க இந்த வேலை நிறுத்தத்தில் 30 கோடி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே ஹோம் தியேட்டர் ரெடி பண்ணுங்க! இந்த வாரம் OTT-யில் 12 படங்கள் ரிலீஸ்!
Tamilnadu government

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com