

வாழ்க்கைக்கு கல்வி என்பது மிகவும் அத்யாவசியத் தேவை. இந்த சொத்து இருந்தால் மற்ற செல்வங்களும் தானே தேடி வரும். நம் தமிழக அரசு கல்விக்கு முன்னுரிமை தந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனம் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் பாதுகாப்பு கிடைக்கிறது.அவ்வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த மாணாக்கர்களுக்கு இணைய வழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி வழங்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பயிற்சியானது இரண்டு வழி முறைகளில் நடைபெறும் என்றும் முதல் 2 வாரங்களில் இணைய வழி கற்றல் வழியிலும் அடுத்த 4 வாரங்களுக்கு முன்னணி நிறுவனமான அப்பல்லோ மருத்துவமனைகள் அல்லது மாணவர்களுக்கு அருகாமையிலுள்ள அப்பல்லோ தொடர்புடைய பிற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும்(OJT) வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ரூ.5,000/- ஊக்கத்தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளிலும் அதனுடன் தொடர்புடைய முன்னணி மருத்துவமனைகளிலும் தகுந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படும் எனும் தகவல் மாணவர்களுக்கு கல்வி மீதான ஊக்கம் தருவதாக உள்ளது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
இப்பயிற்சியினை பெற 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 25 வயது வரையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்க FINE(Finishing Skills for Nursing Excellence) எனப்படும் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள்.
இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதே போல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், முழுநேர Ph.D பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு (புதிய & புதுப்பித்தல்) கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்றும் ( 2025–2026 கல்வியாண்டு) இணையவழியில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற இதர கல்வி சலுகைகளை அரசு வெப்சைட் மூலம் அறியலாம்.
விண்ணப்ப இணையதளம் : ரி https://adwphdscholarship.in/
திட்ட விதிமுறைகள் அறிவதற்கு : www.tn.gov.in/formdept_list.php
நேரடி முகவரி: ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை – 600 005.
தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த வாய்ப்பை தேவைப்படும் மாணவ, மாணவிகள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு பயனடைய கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.