தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று அவர் பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.
அதன்படி, உயர் கல்வித்துறை செயலாளராகப் பொறுப்பு வகித்த கார்த்திகேயன் ஐஏஎஸ், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அடுத்து, பாடநூல் கழக இயக்குநராக இருந்த இளம்பகவத் ஐஏஎஸ், மகளிர் உதவித் தொகை திட்ட சிறப்பு ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தற்போது கால்நடை துறை செயலாளராக இருக்கும் கார்த்திக் ஐஏஎஸ், உயர் கல்வித்துறை செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா ஐஏஎஸ், கால்நடை துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக இருந்த ரீட்டா ஹரீஷ் தாகூர் ஐஏஎஸ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சியின் கூடுதல் வருவாய் ஆணையராக இருந்த விசு மகராஜன் ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
நாகர்கோயில் நகராட்சி ஆணையராக இருந்த ஆனந்த் மோகன் ஐஏஎஸ், சென்னை மாநகராட்சியின் கூடுதல் வருவாய் ஆணையராகப் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை - கன்னியாகுமரி தொழில் வரி வழித்தடத்தின் திட்ட இயக்குநர் அண்ணாதுரை ஐஏஎஸ், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அதேபோல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பிரபாகர் ஐஏஎஸ், சென்னை – கன்னியாகுமரி தொழில் வரி வழித்தடத்தின் திட்ட இயக்குநராகப் பணி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக இருந்த அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ், மருத்துவர் பணியாளர் தேர்வுக் குழு வாரியத்தின் தலைவராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கூட்டுறவு சங்கப் பதிவாளராக பணியில் இருந்த சுப்பையன் ஐஏஏஸ், கூடுதலாக கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.