

சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளும் மற்றும் தவெக என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான பரபரப்பான குற்றச்சாட்டுகளும் மோதல்களும் மேடைப்பேச்சுகளில் அனல் பறந்து வருகின்றன. அந்த வரிசையில் திமுகவின் செயல்பாடுகள் மீது பாஜக தற்போது குற்றம் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தமிழகத்தின் கருவூலம் காலியாக உள்ளது என்று கூறியிருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக வலம் வருகிறது.
திமுக அரசின் நிதி நிர்வாகம் மற்றும் கடன் சுமை குறித்த "வெள்ளை அறிக்கை"யை "தமிழ்நாடு அரசின் நிதி நெருக்கடி" என்ற தலைப்பில் வெளியிட்டார் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும் மூத்த தலைவருமான பியூஷ் கோயல்.
திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் தமிழ்நாடு நிதி நெருக்கடியில் உள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்ற தகவலுடன் அறிக்கை வெளியிடப்பட்டது.
வெள்ளை அறிக்கையில் திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளுடன் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த விபரங்களும் அடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழகத்தில் கடன் சுமை சுமார் ரூபாய் 10 லட்சம் கோடியை கடந்துள்ளது எனவும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது ? மேலும் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 12 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை..பிரச்சினையை திசை திருப்பும் வேலையை மட்டுமே முதல்வர் செய்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
ஜிஎஸ்டி அமலான பிறகு மாநிலங்களுக்கான பகிர்வு தொகை அதிகரித்துள்ளது. ஆனால் இங்கு அவை முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் தாராளமாக உள்ளது என்றும் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கடன் சுமையும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வதால் தமிழக அரசின் கருவூலம் காலியாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தத் தேர்தல் தமிழக வரலாற்றில் திருப்பு முனையாக அமையும் என்றும் 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் திமுக ஆட்சியில் இழந்த அனைத்தையும் NDA கூட்டணியில் அமையும் ஆட்சி அமைக்கும் எனவும் பாஜக சார்பில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.