‘அரசின் முன்னெடுப்புகளால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது’ முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘அரசின் முன்னெடுப்புகளால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது’ முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Published on

சென்னை, நந்தம்பாக்கத்தில் அமைய உள்ள நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிதிநுட்ப தொழில் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே முன்மாதியாக தமிழகம் விளங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன வங்கிக் காப்பீடு உள்கட்டமைப்பு வசதிகளோடு இந்த நிதிநுட்ப நகரம் அமையவிருக்கிறது. இந்த நிதிநுட்ப நகரம் வணிக, குடியிருப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகளோடு, நீடித்த மற்றும் பசுமை உட்கட்டமைப்புகள், பலவகை போக்குவரத்து இணைப்பு அம்சங்களுடன் அமையவிருக்கின்றது. இதுதவிர, LEED பிளாட்டினம் தர மதிப்பிடு பசுமை கட்டடம், 250 இருக்கைகள் கொண்ட கூட்டரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

இது தவிர, சுமார் 80,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க 12,000 கோடி ரூபாய் மூதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிதிநுட்ப நகரமும், சுமார் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீகளை ஈர்க்கும் விதமாக நிதிநுட்ப கோபுரமும் அமையவிருக்கிறது. அனைத்துச் சேவைகளும் ஏழை மற்றும் நடுத்தர மக்களைச் சென்று சேர வேண்டும். தற்போது கைபேசி மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்து இருக்கிறது.

சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையிலும் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும். உலக நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளதால் இங்கு முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் தமிழகம் இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இளைஞர்களின் திறனை வளர்க்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக எடுத்த முன்னெடுப்புகளால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. தொழில்துறை மிக வேகமான முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. புதிதாக அமைக்கப்படும் நிதிநுட்ப நகரத்தில் இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள் செய்துத் தரப்படும்” என முதலமைச்சர் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com