தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் வருகிற 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடபட்டிருந்தது. இதில், குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கான மாற்றப்பட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் 2023ல் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் குரூப் 1 பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், முதல்நிலைத் தேர்வு 2023, 23 நவம்பர் நடைபெறும் என்றும் , முதன்மைத் தேர்வு 2024 ஜுலை 24ம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
இருப்பினும், இந்த திருத்தப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2/2ஏ தேர்வு தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. அதேபோன்று, 2023ல் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அதுதொடர்பான அறிவிப்பும் இடம் பெறவில்லை. குரூப் 1 பணியிடங்கள் மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டிற்கான அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.