
இந்தியாவில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. நம் நாட்டில் உள்ள மக்கள் பலரும் பெட்டி கடைகள் முதல் பெரும் மால்கள் வரை ‘போன் பே’ (Phone pe), ‘ஜி பே’ (Gpay) மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். மக்களிடையே பணம் கையில் இருந்து செலவழிப்பது குறைந்து அனைத்துமே யுபிஐ மூலமே நடைபெறுகிறது.
தற்போது டீக்கடை முதல் பெரிய வணிக நிறுவனம் வரை அனைத்தும் யுபிஐ பேமண்ட் முறையை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் ரேஷன் கடைகளில் மட்டும் யுபிஐ வசதி இல்லாமல் இருந்தது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி வந்தது.
தமிழகத்தில் 2.26 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்காக 34,808 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்தரும் வகையில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நியாவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை போன்றவை இலவசமாக வழங்கப்படும் நிலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற சில பொருட்களுக்கு குறைந்த அளவில் பணம் ரொக்கமாக வாங்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில் ரேஷன் கடைகளில் சில்லறை பிரச்சனை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், இந்த பிரச்சனையை போக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் ‘மொபைல் முத்தம்மா’ என்ற திட்டம் (Mobile Muthamma) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களுக்கு ரொக்கமாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தி விடலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்கள், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை QR Code மூலம் ஸ்கேன் செய்து UPI வழியாக செலுத்தலாம். இதன் மூலம் பணம் நேரடியாக அரசு கணக்கிற்கு செல்லும். இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் தவறான கணக்கு காட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படாது என்பதுடன் முறைகேடுகளும் தடுக்கப்படும்.
இத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ரேஷன் கடைகளில் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் முதல் கட்டமாக சென்னையில் உள்ள சில கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் பயனாளிகளுக்கு எளிமையாகும் பட்சத்தில் படிப்படியாக அனைத்து கடைகளிலும் பயனாளர்கள் வசதிக்கேற்ப பேடிஎம், யுபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகள் கொண்டுவரப்படும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ‘மொபைல் முத்தம்மா’ திட்டத்தின் யுபிஐ பணப் பரிவர்த்தனை மூலம் சில்லறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதால் சமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.