

தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் (Sub-Registrar Offices) என்பது சொத்து பரிவர்த்தனை, திருமணப் பதிவு, உயில், கடன் ஆவணங்கள் பதிவு மற்றும் பிற சட்டப்பூர்வ ஆவணங்களைப் பதிவு செய்யும் அரசு அலுவலகங்கள் ஆகும். தமிழகத்தில் சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், பிறப்பு, இறப்பு போன்றவற்றை பதிவு செய்தல் போன்ற முக்கிய சேவைகள் இந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலமாகவே செய்யப்படுகிறது. அந்த வகையில், வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு வருகின்றனர். சட்டப்பூர்வ ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைப்படி பதிவு செய்வதன் மூலம் மக்கள் சொத்துரிமைகளை உறுதிப்படுத்தவும், சட்ட சிக்கல்களைத் தவிர்க்கவும் முடியும்.
தமிழகம் முழுவதும் சுமார் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பதிவு செய்தல் போன்ற முக்கிய சேவைகளுக்காக வந்து செல்வார்கள். அதேநேரம் முகூர்த்த நாட்களில் அதை விட அதிகளவில் கூட்டம் வரும்.
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு அவர்களது சேவைகள் விரைவில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மக்கள் எளிதாக பத்திரப்பதிவு செய்வதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், இப்போது பதிவுத்துறை அலுவலகங்கள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களுக்கு சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் வழங்க முடியும்.
இந்நிலையில் பதிவுத்துறையில் மக்களுக்கான பத்திரப்பதிவு சேவைகள் விரைவாகவும், இருந்த இடத்திலேயே கிடைக்கவும் வழிவகை செய்யும் வகையில் புதிய சீர்திருத்தமாக ‘ஸ்டார் 3.0' என்ற திட்டத்தை தமிழக அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.
‘ஸ்டார் 3.0' என்ற திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இனிமேல் சொத்து பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களுக்கு, அதாவது வீடு, மனை வாங்குவது, விற்பது போன்றவற்றிற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பலமணிநேரம் கால்கடுக்க இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘ஸ்டார் 3.0'திட்டம் மூலம் புதிய வீடுகள், மனைப்பிரிவுகளை வாங்கவும், விற்கவும் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்ய முடியும்.
இதற்கு தேவையானது விரல் ரேகைப் பதிவு செய்வதற்கான எந்திரம் மட்டும் தான். இது கடைகளில் கிடைக்கிறது. இதன் விலை 1500 ரூபாய் தான்.
பத்திரப்பதிவு இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், OTP எண் கேட்கும். அதனைஅதில் குறிப்பிட்டவுடன் விரல் ரேகைப்பதிவு செய்ய கேட்கும். அதனையும் பதிவுசெய்தால் அனைத்து பணிகளையும் இருந்த இடத்திலேயே செய்து முடித்துவிடலாம். இந்த முறையில் பத்திரப்பதிவு செய்ய அதிகபட்சமாக 10 நிமிடங்கள் கூட ஆகாது. அதுமட்டுமின்றி நம்முடைய கையில் பத்திரப் பதிவு செய்ததற்கான ஆவணங்களும் உடனே கிடைத்துவிடும். இதன் மூலம் மக்களுக்கு இனிமேல் அலைய வேண்டிய நிலையும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் நிச்சயம் இருக்காது.
‘ஸ்டார் 3.0' என்ற திட்டம் இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பத்திரப்பதிவு சார்ந்த விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக 'செயலி' ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த செயலியில், சொத்தின் வழிகாட்டி மதிப்பு எவ்வளவு?, சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா?, சொத்து எந்த எல்லையில் அமைந்துள்ளது? அதன் பத்திரங்களின் நிலை என்ன? என்பது போன்ற பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி திருமண சான்றிதழ்களை வாங்க சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும் சூழல் இருந்தது. அதனையும் இனிமேல் இந்த செயலி மூலம் விண்ணப்பித்து உடனே வாங்க முடியும்.