

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் , ஒவ்வொரு கட்சியும் மக்களுக்கு தாங்கள் வழங்க உள்ள சலுகைகளை பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். திமுக தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் "தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்படும்" என்ற தலைப்பில் ,சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
இந்த கூட்டத்தில் அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 14 அம்சங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்காக தமிழகம் முழுவதிலும் உள்ள 1.80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாகக் கருத்து கேட்கப்பட்டு இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நிலஉரிமை மற்றும் கனவு இல்லங்கள்:
1.தமிழக மக்களின் கனவு இல்லங்களை நிறைவேற்றும் வகையில் , வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் என மொத்தம் 7 லட்சம் புதிய வீடுகள் தமிழக அரசால் கட்டித் தரப்படும்.
2. 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு சொந்தமாக வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.
கல்வி மேம்பாடு மற்றும் நவீன வகுப்புகள்:
3. கல்வியில் இடைநிற்றல் தடுக்கப்படும். எவருடைய கல்வியும் பாதியில் தடை படாத வகையில் நிலையினை உருவாக்கி 'அனைவருக்கும் கல்வி' என்பதை முழுமையாகச் செயல்படுத்துதல்.
4. உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை 90% உயர்த்த 2030 ஆம் ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
5. மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
6. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ச்சி:
7. நான் முதல்வன் 2.0 திட்டத்தின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.
8. ஜவுளி, ஆடை வடிவமைப்பு மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த தொழில்களில் முன்னேற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
9. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தப்படும்.
சிறுபான்மையினர் நலம் மற்றும் பொது சுகாதாரம்:
10. சிறுபான்மை இன மக்களின் தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் எளிமையாக்கப்பட்ட முறையில் கடன் வழங்கப்படும்.
11. மாநில முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்கப்படும்.
வேளாண்மை மற்றும் கால்நடை :
12. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 1,000 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
13. நாளொன்றிற்கு 3 கோடி லிட்டராக இருக்கும் பால் உற்பத்தியை 2030-ம் ஆண்டிற்குள் 4.5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
14. உணவுப்பொருள் உற்பத்தியை 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்துதல் ஆகியவை முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.