ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவலின்படி, அதிகக் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகித்து வருகிறது. கடந்த 2022-23ம் நிதி ஆண்டைப் பொறுத்தமட்டில் முதல் பதினொரு மாதங்களில் தமிழ்நாடு 68 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசம் 51,860 கோடி ரூபாயும், மகாராஷ்டிரா 50 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் பெற்று உள்ளன. இதற்கு முந்தைய இரண்டு நிதி ஆண்டுகளிலும்கூட அதிகக் கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருந்தது. 2020-21ம் நிதி ஆண்டில் 87,977 கோடி ரூபாயை கடனாகப் பெற்ற தமிழ்நாடு, 2021-22ம் ஆண்டில் 87 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இந்த இரண்டு நிதி ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் தமிழ்நாடு பெற்ற கடன் சற்றே குறைந்து இருக்கிறது. அதேசமயம், நிதி ஆணையப் பரிந்துரையின் கடன் பெறும் அளவுக்குக் கீழ்தான் தமிழ்நாடு கடன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகக் கடன் பெறும் பத்து மாநிலங்கள் குறித்து செய்த ஆய்வின்படி, கடந்த நிதி ஆண்டில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை கடன் பெறுவதை பெருமளவில் குறைத்துள்ளன. 2022-23ம் நிதி ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் உத்தரப்பிரதேசம் 33,500 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. 2021-22ம் நிதி ஆண்டில் இம்மாநிலம் 62,500 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தது. சொந்த வரி மற்றும் வரியற்ற வருவாய் ஆகியவை அதிகரிப்பின் காரணமாகவே, உத்தரப்பிரதேசம் கடன் வாங்குவதை குறைத்து இருக்கிறது.
அதேசமயம், ஆந்திரா, ஹரியானா, குஜராத் மாநிலங்கள் கடந்த 2021-22 நிதி ஆண்டில் பெற்ற கடனை விட 2022-23 நிதி ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் அதிக கடன் பெற்று உள்ளன. நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மகாராஷ்டிரா 25 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழகம் 24 ஆயிரம் கோடி ரூபாயும், ஆந்திரா 20 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது. உத்தரப்பிரதசேம் 18,500 கோடி ரூபாயும், ராஜஸ்தான் 15 ஆயிரம் கோடி ரூபாயும், பஞ்சாப் 12,700 கோடி ரூபாயும், மேற்கு வங்கமும் தெலங்கானாவும் 12,500 கோடி ரூபாயும் கடன் வாங்கலாம் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஹரியானா 12 ஆயிரம் கோடி ரூபாயும், குஜராத் 11 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் பெறலாம் என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கணித்து இருக்கிறது.