தமிழ் நாடு vs தமிழகம் - மறுபடியுமா?

தமிழ் நாடு vs தமிழகம் - மறுபடியுமா?
Published on

ஒன்றரை வருஷமாக உயிர்ப்போடு இருக்கும் சர்ச்சை. இம்முறை ஆளுநர் பேசியதும் மறுபடியும் சர்ச்சையாகியிருக்கிறது. ஆளுநர் இப்படி பேசலாமா என்று கேட்பதிலும் நியாயம் இருப்பது உண்மைதான்.

'தமிழ்நாட்டின் அரசியல் சூழல் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் திராவிடர்கள் என்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் கொண்டு வந்தால் அதை வேண்டாமென்று மறுக்கிறார்கள். தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதுதான் இருக்கும்' என்கிறார் தமிழக ஆளுநர்.

திராவிட நாடு கோரிக்கையையும் தமிழ்நாடு பெயரையும் குழப்பிக் கொள்பவர்கள் நிறைய பேர் உண்டு. ஆளுநர் மாளிகைக்கும் குழப்பம் இருப்பதாக சொல்கிறார்கள். திராவிட நாட்டை கைவிட்டவர்கள்தான் தமிழ்நாட்டில் அதிகம்.

திராவிட நாடா, தமிழ்நாடா என்று சர்ச்சை வந்தபோது காங்கிரஸ், கம்யூனிஸ்ட். திராவிடர் கழகம் என கட்சி வேறுபாடின்றி தமிழ்நாடுதான் வேண்டுமென்று தமிழர்கள் உறுதியாக நின்றார்கள்.

"மெட்ராஸ்" என்ற பெயருக்குப் பதிலாக "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்ட வேண்டுமா, கூடாதா என்று ஏகப்பட்ட விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், தமிழ்நாடா, தமிழகமா என்று விவாதம் நடப்பது இதுதான் முதல் முறை.

ஏன் தமிழகம் என்று சொல்லவேண்டும்? ஆளுநர் மாளிகை விளக்கம் தரப்போவதில்லை. ஆனால், ஆளுக்கொரு விளக்கம் வெளியிலிருந்து வர ஆரம்பத்திருக்கிறது. தமிழ் நாடு அரசு என்னும் அதிகாரப்பூர்வ பெயர் இருக்கும்போது, ஆளுநரே அதை மறுப்பதுதான் சர்ச்சையின் மையப்புள்ளி

தமிழ்நாடு என்னும் பெயர், தமிழ் இலக்கியங்களில் நிறைய இடங்களில் இடம்பெற்றிருகிறது. அதே நேரத்தில் அகம் என்று சொல்லுக்கு மனம், இல்லம் என்று பொருள் உண்டு; தமிழை அகத்தே கொண்ட பகுதி தமிழகம். ஆகவே, தமிழகம் என்று அழைப்பதுதான் சரியென்று செல்பவர்களும் உண்டு.

அன்பகம், அறிவகம், எழிலகம் என்று ஏகப்பட்டவை புழக்கத்தில் இருப்பதால் தமிழகம் என்பதை தவிர்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பகுதிகளை குறிக்க வேணாடு, அருவா நாடு, குட்ட நாடு என்ற சங்க இலக்கியங்களிலும் சொல்லப்படுவதால் தமிழ்நாடு என்று சொல்வதிலும் தவறில்லை என்கிறார்கள்.

தமிழ்நாடா, தமிழகமா என்பது பற்றி தமிழறிஞர்கள்தான் ஆய்வு செய்ய வேண்டும். "பூ என்றாலும் புஷ்பம் என்றாலும் இரண்டும் ஒன்றுதானே என்று கேட்கும் அப்பாவி தமிழனின் குரல்தான் யாருக்கும் கேட்கவில்லை."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com