‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘, ‘தமிழருக்குச் சென்றவிடமெலாம் சிறப்பு‘
- இந்த சொற்றொடர்கள் தமிழர் மற்றும் தமிழ் மொழியின் மேன்மையை உலகெங்கும் பறைசாற்றுகின்றன.
சேர, சோழ, பாண்டியர் ஆட்சி காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் மேற்கொண்டார்கள். அவர்கள் எந்தெந்த நாட்டுக்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் தமிழ் முத்திரையைப் பதிக்காமல் திரும்பவில்லை. அதனால்தான் இப்போதும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சியிலோ, வேறு முயற்சியிலோ தமிழ் அடையாளங்கள் காணக் கிடைக்கின்றன.
இப்போது தமிழுக்குப் புது அடையாளம் கிடைத்திருக்கிறது, அமெரிக்காவில்! ஆமாம், அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டில் தமிழ் கோலோச்சுகிறது!
'வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்கள்: ஒரு வேட்பாளர் அல்லது ஒரு நடவடிக்கைக்கு வாக்களிக்க வேட்பாளர் பெயர் அல்லது ‘ஆம்‘ அல்லது ‘இல்லை‘ என்பதற்கு அடுத்துள்ள நீள்வட்டத்தை முழுமையாக நிரப்பவும். பட்டியலிடப்படாத வேட்பாளருக்கு வாக்களிக்க, கொடுக்கப்பட்ட காலியான வரியில் பெயரை எழுதி, நீள்வட்டத்தை முழுமையாக நிரப்பவும். நீங்கள் தவறு செய்தால் சரியான வாக்கை முடிந்தவரை தெளிவாகக் குறிக்கவும். நீலம் அல்லது கருப்பு மையை மட்டுமே பயன்படுத்தவும். சிவப்பு மையைப் பயன்படுத்த வேண்டாம்.'
- இப்படி வழிகாட்டல் வாசகங்களுடன் அங்கே வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட இருக்கின்றன. இந்த வாக்குச் சீட்டுகள், செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024 அன்று நடைபெறப்போகும் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
அமெரிக்க நாட்டிலுள்ள கான்ரா கோஸ்டா மாகாணத்தில் தமிழ் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கே விநியோகிக்கப்படவிருக்கும் வாக்குச் சீட்டில்தான் இவ்வாறு தமிழில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மாகாணத்தில் கமலா ஹாரிஸுக்கு அதிக வாக்குகள் கிடைக்குமானால், அது, இப்போதைய தமிழர்கள், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இன்னொரு தமிழருக்கு அளிக்கும் ஆதரவு என்றே பெருமைப்படலாம், இல்லையா?