தருமபுரி அதியமான் கோட்டையில் கால பைரவரை வணங்கும் நாயின் பக்தி!

தருமபுரி அதியமான் கோட்டையில் கால பைரவரை வணங்கும் நாயின் பக்தி!

சில விஷயங்கள் நம் புற அறிவுக்கு எட்டாவையாக நிகழ்வதுண்டு. நம் சக்திக்கு மீறியவற்றை ஆன்மீகத்தில் அதிகம் காணலாம். இப்படியும் நடக்குமா என்று எண்ண வைக்கும் அதிசயங்களும் ஆன்மீகத்தில் ஏராளம். அதில் ஒன்றுதான் வாயில்லா ஐந்தறிவு ஜீவனான சுப்பு எனும் நாயின் பக்தி.

காசி என்றாலே கால பைரவர் கோவில்தான் நினைவுக்கு வரும். காசிக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் தட்சிண காசி காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாக உள்ளது. காசிக்கு செல்லும் வசதியற்றவர்கள் இங்கு வந்து கால பைரவரை தரிசித்து செல்வதை பெரும்பேறாக நினைக்கின்றனர்.

மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க 1200 ஆண்டு காலம் பழமையான இக்கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று வெகு சிறப்பாக பைரவருக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரின் அருள் பெற்றுச் செல்வது வழக்கம்.  இந்த தேய்பிறை அஷ்டமிக்காக பைரவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தைக்காண பக்தர்கள் முன்பதிவு செய்வதுடன்  ராகுகால பூஜை, மாலை 6 மணிக்கு மிளகாய் வற்றல் மூலம் நடத்தப்படும் யாகம், எதிரிகளை ஒழிக்கும் சத்ரு  சம்ஹாரயாகம், குருதியாகம் ஆகியவைகளைக் காணவும் பெரும் பக்தர்கள் திரள்வார்கள்.

இந்த காலபைரவர் கோவிலில் சுப்பு என்ற சுப்புலட்சுமி என்ற பெண் நாய் கடந்த ஆறு வருடமாக வளர்ந்து வருகிறது. இந்த நாய் அசைவ உணவைத் தவிர்த்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பிஸ்கட், பால் போற்றவற்றையும் ஊழியர்கள் தரும் பால் சாதத்தையும் மட்டும் சாப்பிடுகிறது. மேலும் கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதும் கிடையாது.

காலையில் 6:00 மணிக்கு நடை திறக்கும்போது கோவில் பூசாரிக்கு முன்னால் உள்ளே சென்று பைரவரை நின்று பார்த்து விட்டு திரும்புகிறது. இதேபோல் மாலை நான்கு மணிக்கு நடை திறந்ததும் முதல் ஆளாக  உள்ளே சென்று கால பைரவரை பார்த்துவிட்டு வருகிறது.

சில நாட்களில் அடிக்கடி கோவிலின் உள்ளே சென்று விட்டுத் திரும்பும் இந்த நாய் பின்னர் கோவில் வளாகத்திலோ அல்லது அறநிலையத்துறை செயல் அலுவலர் படுத்துக் கொள்வது வழக்கம். இதுபோல் கால பைரவரை தினமும் நாய் வழிபடும் அதிசயம் வேறு எங்கும் இல்லை என்பதால் இந்தக் காட்சியை பார்க்கும் பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகின்றனர்.

இது பற்றி கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறுகையில் “கடந்த ஆறு வருடங்களாக சுப்பு இங்கே வளர்ந்து வருகிறது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் தினமும் கோவில் நடை திறக்கும் சத்தம் கேட்டதும் கருவறைக்குள் சென்று மூலவரை சுற்றி வந்து பின்னர் கோவில் வளாகத்தில் படுத்து கொள்கிறது. கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. இதற்கு முன்பு பல நாய்கள் இங்கு  வளர்ந்த போதும், சுப்பு மட்டுமே பைரவரை தினமும் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

எனது அறையில் படுத்திருக்கும் சுப்பு வெளியேறினால் நல்லது என நாம் நினைத்தால் உடனே அறையை விட்டு வெளியேறிவிடும். அந்த அளவிற்கு நாம் நினைப்பதை உணரும் சக்தியும் இந்த சுப்புவுக்கு உண்டு” என்று மகிழ்கிறார்.பொதுவாக நாயை பைரவரின் அம்சம் எனக் கொண்டாடு வார்கள். இந்த ஆன்மீக நாயான சுப்புலட்சுமியையும் கால பைரவராகவே பக்தர்கள் கருதுகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com