

லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தமிழக பா.ஜ.க தலைவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சர்ச்சையானது. லண்டனில் யாரை அண்ணாமலை சந்தித்தார் என்னும் பத்திரிக்கையாளரின் கேள்வி, அண்ணாமலையை கோபப்படுத்தியது. இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து லண்டனில் அண்ணாமலை பேசியது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக பா.ஜ.கவினர் சமீப காலங்களில் அக்கறை செலுத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசிய தமிழக பா.ஜ.கவினர், 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை அமல்படுத்த இந்தியா அழுத்தம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மேற்கொண்ட இலங்கை பயணமும் கவனம் பெற்றது.
இந்நிலையில் சமீபத்திய லண்டன் பயணத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விரிவாக பேசியிருக்கிறார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கில் பிரிட்டன் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டவர், 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பேசியிருக்கிறார்.
1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் இதுவரை நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. அதன் காரணமாக 2009, தமிழர் வரலாற்றில் மிகவும் துயரமான ஆண்டாக அமைந்துவிட்டது. இலங்கையின் உள்நாட்டுப் பேரை தடுக்கவேண்டிய பொறுப்பில் இருந்து அன்றைய காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்றவர், 2014ல் மோடி பிரதமரான பின்னர்தான் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னையை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு இருப்பதாக மோடி உணர்ந்திருப்பதாகவும், இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கான பல பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அரசால் இலங்கைத் தமிழர் வசிக்கும் பகுதிகளில் வீடு கட்டித் தரப்பட்டிருக்கிறது. கொழும்பு - யாழ்ப்பாணம் ரயில் போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது. காரைக்காலுக்கும் காங்கேசன் துறைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தும் தொடங்க இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
பொருளாதார சூழல், சீனாவில் முதலீடு, கடன் உதவி உள்ளிட்டவற்றால் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தாமதப்படலாம். ஆனால், பா.ஜ.க அதை நோக்கி பயணம் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் செங்கோல், தமிழ் உள்ளிட்ட விஷயங்களை பா.ஜ.க தலைமை முன்னிறுத்துவதும், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பேசி வருவதும் தமிழக அரசியல் கட்சிகளால் கவனமாக பார்க்கப்படுகிறது.