ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திக சிங் ஷெகாவத் சனாதன தர்மம் பற்றி தவறாக பேசுபவர்களின் நாக்கு வெட்டப்படும் என்ற கருத்துக்கு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "சனாதன தர்மத்தில் இருப்பவர்கள் அடிப்படையில் ஹிம்சையை எதிர்த்து அகிம்சையில் இருப்பவர்கள், யாரும் அப்படி பேசுவதற்கு உரிமையில்லை. யாராவது அப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதனை திருத்திக்கொள்ளவேண்டும். காரணம் இந்து மதம் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி செயல்படும் தன்மை கொண்டது.
இந்து மதம்தான் அனைத்து சமயத்தினரையும் அரவணைக்கும் தன்மைகொண்டது. அதனால் சனாதனம் குறித்து பேசியவர்கள் தொடர்பாக யாராவது உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்து அப்படி சொல்லி இருந்தாலும் கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது தவறான அர்த்தத்தை கொடுக்கும். யார் சொல்லி இருந்தாலும், இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது.
அதேபோல், பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையினரின் ஆடை காவி நிறத்திற்கு மாற்றப்படும் என்ற கருத்து தொடர்பாக பதில் அளித்த அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் எப்போது வந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை மதசார்பற்ற மாநிலமாகதான் இருக்கும். எல்லா மதத்திற்கு பாஜக கட்சி மரியாதை கொடுக்கும். தமிழகத்தை பொருத்தவரை மதசார்பற்ற மாநிலமாகதான் தொடரும். இதனை மாற்ற முயன்றால் பிரச்சனையாகிவிடும். பாரதிய ஜனதா கட்சி அனைவருக்குமான கட்சி" என்றார்.