உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

றக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. மண்ணுக்குள் போகும் உடலின் உறுப்புகளை கொடுப்பதன் மூலம் இன்னொரு உயிர் இந்த உலகத்தில் குறைந்த காலம் வாழும்.  இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இதனால் தான் உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கடந்த மாதம், சிறந்த உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான விருதை தமிழ்நாடு பெற்றது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, அந்த விருதை வழங்கியிருந்தது. தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

இது ஒரு நல்ல அறிவிப்பு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் இனி உடல் உறுப்பு தானம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com