ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.3440 கோடி புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு: முதலமைச்சர்!

CM Stalin Return from Spain
CM Stalin Return from Spain

ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டதில் தமிழ்நாட்டிற்கு ரூ.3440 கோடி புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கூறியதாவது,” ஸ்பெயின் நாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு சாதனை பயணமாக அமைந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் போது ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன்.

தமிழ்நாட்டில், தொழில் தொடங்குவதற்கு இருக்கக் கூடிய உகந்த சூழல் பற்றி அங்கே எடுத்துச் சொல்லி, நம்முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதன்படி, சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

1. காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்சியானா நிறுவனம்

2. உயர்தர வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும் உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம்

3. கண்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்களை அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக்-லாய்டு நிறுவனம்

4. சர்வதேசத் தரத்தில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம்

5. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற கெஸ்டாம்ப் நிறுவனம்

6. இரயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய டால்கோ நிறுவனம்

7. பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய்கின்ற எடிபான் நிறுவனம்

8. உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ நிறுவனம்

- ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை எல்லாம் நான் சந்தித்தேன். இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும் தங்களுடைய தொழில் திட்டங்களையும் விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களுடைய ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.

இந்த முயற்சிகளின் பயனாக, 3,440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக,

1. ஹபக் லாய்டு நிறுவனம் – 2500 கோடி ரூபாய் முதலீடு.

2. எடிபான் நிறுவனம் – 540 கோடி ரூபாய் முதலீடு.

3. ரோக்கா நிறுவனமும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

இந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்தில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தித் துறையில் முந்திச் செயல்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் பல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தியா பயணிக்கக் கூடிய பாதையில், முந்தி பயணிப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருவதாகவும், முதல் பக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறது, அதை பாராட்டியும் இருக்கிறது. இது போன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்த எளிய வழிகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் தெரியுமா?
CM Stalin Return from Spain

தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இது போன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com