

மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய நிலை மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது. தொடர் கலவரம் மணிப்பூரே ஸ்தம்பித்துள்ளது.
இந்த நிலையில் மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய நிலை மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறும். மேலும் ஜூலை 23ஆம் தேதி மதுரையில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
எதற்காக மாநாடு என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் குடைச்சல் கொடுப்பதும், தலைவலி கொடுப்பதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கடுமையான விமர்சனங்கள் எழுந்து கூட ஆளுநர் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்பொழுது ஆளுநர் மாநிலத்தினுடைய உரிமைகளுக்கு எதிராகவும், மக்களுடைய நலனுக்கு எதிராகவும் தொடர் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவது சம்பந்தமாக நேற்று சென்னையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இப்படி பல்வேறு விஷயங்களில் மாநில மக்களுக்கு எதிராக இருக்கிறார், இப்படியான ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.
இந்தியாவில் அதிக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கட்சி பாஜக. தற்போது இந்திய பிரதமர் பிரான்ஸ் சென்றபோது அந்த நாட்டினுடைய ஊடகங்கள் இந்திய பிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் வெளிப்படுத்தின. 2016 நடைபெற்ற ரபேல் ஊழல் தொடர்பாக நடைபெறும் வழக்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அந்த நாட்டினுடைய நீதிபதி, இந்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பொது சிவில் சட்டம் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை பறிப்பதாகவும், வழிபாட்டு முறைகளில் குறிக்கிடுவதாகவும் இருக்கிறது, இந்த சட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய சட்டம்.மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது வரை நிதி ஒதுக்காமல், அடிக்கல் நாட்டியதோடு அப்படியே நிற்கிறது. இது தமிழ்நாட்டை வஞ்சிக்க கூடிய செயல் என்று குற்றம் சாட்டினார்.