திருச்சி நகராட்சிக்கு உட்பட்ட கிராப்பட்டி பகுதியில் 58வது வார்டு வட்ட செயலாளர் கிராபட்டி செல்வம் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.என்.நேரு கூறியது, அண்ணாமலைகோ, அதிமுகவிற்கோ பயந்தவர்கள் அல்ல நாங்கள். அண்ணாமலை தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக தொடர்ந்து ஏதாவது ஒன்றை பேச வேண்டுமே என்று பேசி வருகிறார்.
திருச்சிக்கும் திமுகவிற்குமான உறவு மிகப்பெரியது. அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் அவர்களால் திருச்சிக்கு எந்த ஒரு பயனும் நடக்கவில்லை. அதேநேரம் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த பொழுது திருச்சிக்கு வரும் பொழுது எல்லாம் ஒரு திட்டம் என்று தொடங்கி வைப்பது வழக்கம். அதை பின்பற்றியே தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினும் திருச்சிக்கு வரும் போதெல்லாம் ஒவ்வொரு திட்டம் என்று பல்வேறு திட்டங்களை அடுக்கடுக்காக செயல்படுத்தி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சியின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைத்த பேருந்து நிலையம் அரை வட்டச் சாலை, சுற்றுவட்டச் சாலை, நகர்புற மேம்பால பணிகள் என்று பல்வேறு திட்டப் பணிகளுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவினர் செந்தில் பாலாஜியை கைது செய்து விட்டார்கள், அடுத்த கைது கே.என்.நேரு தான் என்றெல்லாம் கூறி வருகிறார்கள் அதற்கெல்லாம் திமுக பயப்படாது. திமுகவிற்கு அமைச்சர் அமைச்சராகவும் இருப்பேன், சிறை செல்ல தயாராகவும் இருப்பேன். திமுக தொண்டர்களை யாராலும் மிரட்ட முடியாது என்று பேசினார். தொடர்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதி கூறியது, செந்தில் பாலாஜியை கைது செய்தது அயோக்கியத்தனமானது. அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் அவர் தப்பித்தார். கைது செய்யப்பட்ட பிறகு அது தெரிந்திருந்தால் அவர்கள் செய்யும் சித்திரவதையிலேயே அவர் உயிரிழந்திருப்பார். நாங்கள் அவருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.