

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்த தேர்தலில பதிவான வாக்குகள் இன்று (மே 4-ந் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் போட்டியிட்டனர்.
தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். இந்த இணையதளத்தில் இன்று காலை 8 மணி முதல் 5 மாநில தேர்தல் முடிவுகளை தனித்தனியாக உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. இது தவிர ‘ECINET’ மற்றும் ‘Voter Helpline’ என்ற செல்போன் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
வாக்கு எண்ணும் மையங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கான மொத்தம் 3324 மேஜைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி உண்டு. மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் உள்பட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது.
தமிழகம் தவிர புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இன்று (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு, தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தபால் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது நிலவரப்படி திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக முன்னிலை வகிக்கிறது.
அதன்படி தபால் வாக்கு எண்ணிக்கையில் தவெக 69 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து அதிமுக 57 தொகுதிகளிலும், திமுக 41 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
பொதுவாக கடந்த பல தேர்தல்களாக, குறிப்பாக கலைஞர் ஆட்சி காலம் முதல் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு ஆதரவாகவே அதிகம் வாக்களிப்பார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த முறை அந்த சரித்திரத்தை தவிடுபொடியாக்கிய தவெக பெரிய மற்றும் பலம் பொருந்திய கட்சிகளான திமுக, அதிமுகவை பின்னினுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறது.