காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்திட முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாகவே காவல்நிலையம் என்றாலே பலருக்கும் பயம் தான் வரும். இன்னும் சிறு குழந்தைகள் மத்தியில் காவல்நிலையம் என்றால் தப்பு செய்பவர்கள் போகும் இடம் என்று தான் தெரியும். என்னதான் காவல்துற உங்கள் நண்பன் என்று சொல்லினாலும் பலரும் போலீசாரையும், போலீஸ் ஸ்டேஷனையும் பார்த்து நடுங்க தான் செய்கிறார்கள்.
இந்த நிலையை போக்கவே தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவல்துறையினர் பொதுமக்களை நண்பர்களாக கருதி, அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழக அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக 250 காவல்நிலையங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் செலவில் வரவேற்புறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் ரூ.10 கோடி செலவில் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தற்போது இந்த வசதிகளை ஏற்படுத்த காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் காவல்நிலையங்கள் நவீனமயம் ஆக்கப்படுவதோடு அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் இடமாகவும் காவல்நிலையம் அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.