
தமிழக அரசு சார்பில் 2025ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். இதில் பலரும் ரொக்க பணம் சேர்த்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து தமிழக மக்கள் கொண்டாடுவர். அந்த வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு ஊர்களில் இருக்கும் நபர்களும் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஜல்லிக்கட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும். இந்தாண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் கூட இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைகு வந்தது. அதில் மனுதாரர், பொங்கல் பரிசுத் தொகுப்பில் சக்கரைக்குப் பதில் வெல்லம் வழங்க வேண்டும் என்றும், பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கத்தை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் சக்கரைக்குப் பதில் வெல்லம் வழங்க நடப்பு ஆண்டே இயலுமா என கேள்வி எழுப்பி, இல்லையெனில் 2026ஆம் ஆண்டு செயல்படுத்துவது பற்றி அரசு முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகையை செலுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேரடியாக வங்கியில் பணம் செலுத்துவதற்கான ஆலோசனைகளை, நல்லவை தீமைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பணம் தவிர பொங்கல் பரிசுக்கான டோக்கன் அடுத்த வாரம் இறுதியில் இருந்து, பெரும்பாலும் 20ம் தேதியில் இருந்து, வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10ம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இந்த வருடம் கரும்பு வழங்கப்படும், ஆனால் வெல்லம் இருக்காது என சொல்லப்படுகிறது.