

முதியோர், ஆதரவற்றோர் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஆதரவற்ற விதவை மற்றும் முதியோருக்கான உதவித் தொகையை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அதில், தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்ககூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 845 கோடி கூடுதலாக செலவாகும்.
முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ. 1000-லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும்.கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான முகாம்கள் 3 கட்டமாக நடத்தப்பட உள்ளன”என்று கூறினார்