அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு! பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

Tamilnadu
Tamilnadu
Published on

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன. முன்னதாக, டிசம்பர் 22-ஆம் தேதி அமைச்சர்கள் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் நடத்துவதில் அந்த அமைப்புகள் உறுதியாக இருந்தன.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவை அரசு அமைத்திருந்தது. இக்குழு தனது விரிவான ஆய்வை முடித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசிடம் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் போராட்டக் குழுவினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்தது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 2-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் ஐ.ஏ.எஸ். குழுவின் பரிந்துரைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில், ஜனவரி 3-ஆம் தேதி இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்:-

1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார்

11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த TAPS திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பொது இடங்களில் மரம் வெட்ட தடை - மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்.!
Tamilnadu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com