ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்ககேடு: முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்ககேடு: முதலமைச்சர் ஸ்டாலின்!

மிழ்நாடு ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மலர்மாலை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ”இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அவ்வப்போது உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்புகிறோம். வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொடர்பு கொள்கிறோம். பிரதமருக்கும் பல கடிதங்கள் எழுதியிருக்கிறோம்.

அவ்வப்போது சில முயற்சிகளில் அவர்களை விடுவிக்கிறோம். அண்மையில் கூட இராமநாதபுர பகுதியைச் சார்ந்த மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய செய்தி கிடைத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த செய்தி கிடைத்தவுடனே, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவரை தொடர்பு கொள்ள இன்று காலையில் கூட நம்முடைய நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர். பாலு அவர்களை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

அவர் அங்கு சென்று இது குறித்து பேச சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், இராமநாதபுரம் பகுதியில் இருக்கக்கூடிய மீனவர் சமுதாயத்தின் சில நிர்வாகிகளையும் போகச் சொல்லியிருக்கிறோம். அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று இந்தப் பிரச்சனை குறித்து நேரடியாக சென்று பேச சொல்லியிருக்கிறோம்.

“இன்னார்க்கு மட்டுமே இது” என்று சொல்வது ஆரியம். ‘எல்லார்க்கும் எல்லாம் உண்டு” என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை, இந்த உண்மையை தயவுசெய்து நம்முடைய ஆளுநர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க வேண்டும் என ஏற்கனவே இதுகுறித்து, ஒன்றிய அரசிடம் சொல்லியிருக்கிறோம். பார்ப்போம்” என்றார்.

அதேபோல், ஆளுநர் மாளிகை அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், ”ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. மாளிகைக்கு வெளியில் தெருவில் வீசப்பட்டிருக்கிறது. அதனுடைய CCTV காட்சிகள் எல்லாம் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகை நிருபர்களை அழைத்து வெட்டவெளிச்சமாக காண்பித்திருக்கிறார்கள். ஆளுநர் மாளிகையிலிருந்து திட்டமிட்டு இந்தப் பொய் பரப்பப்படுகிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையும் பி.ஜே.பி கட்சியின் அலுவலகமாக மாறியிருக்கிறது. அதுதான் வெட்கக்கேடு” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com