தனியார் பள்ளிகளில் பிரிவினையை தூண்டும் நிகழ்ச்சிகள் நடத்த தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Tamilnadu
Tamilnadu
Updated on

சட்டமன்றத் தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள இந்த நிலையில், பள்ளிகளில் அரசியல் நிகழ்வுகள், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 58,000 பள்ளிகள் உள்ளன. இதில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 13,000 அளவிற்கு உள்ளது. இந்த தனியார் பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மதம், அரசியல் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிறுபான்மை அமைப்புகள் பள்ளி வளாகங்களில் தொடர்ந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இனி தனியார் பள்ளிகளில் பிரிவினையைத் தூண்டும் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுவதால் பலவிதமான பிரச்சனைகள் வருகின்றன. இதை முற்றிலும் தடை செய்வதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த ஒரு பள்ளி வளாகமும் பள்ளி நேரத்திலோ அல்லது அதற்கு பின்போ எந்த ஒரு நிகழ்ச்சியையோ, கூட்டம், பிரச்சாரம், அறிவுறுத்தல் அல்லது எந்த ஒரு வெளிப்புற நபர், சங்கம் அல்லது அமைப்பின் எந்த ஒரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்யவோ, நடத்தவோ பள்ளி வளாகங்களை பயன்படுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்களை கொண்டு வந்து தமிழ்நாடு அரசு அரசாணையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளியின் கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாத அரசியல், வகுப்புவாத அல்லது பிரிவினைவாத நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளது. கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், ரத்த தான முகாம்கள், நினைவு விழாக்கள் போன்ற மதசார்பற்ற, அரசியல் சாராத, கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் தகுதி வாய்ந்த அதிகாரியின் முன்அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரிவினையை ஏற்படுத்தும் மதம், ஜாதி, மொழி சார்ந்த நிகழ்வுகள் மாணவர்களிடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பிரவுன் நிற கண்கள் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கும் ரகசிய சக்தி!
Tamilnadu
logo
Kalki Online
kalkionline.com